அமெரிக்காவில் பயங்கரம்... ஹாக்கி விளையாட்டின் போது துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு!

 
அமெரிக்கா ஹாக்கி

அமெரிக்காவின் ரோட் தீவு மாகாணத்தில் ஹாக்கி விளையாட்டின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிதாரி உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ரோட் தீவு மாகாணத்தில் உள்ள ஒரு மைதானத்தில் இளைஞர்கள் சிலர் உற்சாகமாக ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கிச் சரமாரியாகச் சுடத் தொடங்கினார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தனிப்பட்ட முன்விரோதம் அல்லது சொந்தப் பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த விரிவான விவரங்களை வெளியிட அதிகாரிகள் தற்போது மறுத்துவிட்டனர்.

அமெரிக்காவில் சமீபகாலமாகப் பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. பள்ளி, தேவாலயம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நிகழும் இத்தகைய வன்முறைகள் அமெரிக்க மக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.