திருச்செந்தூரில் பயங்கரம்: பயணிகளை ஏற்றிச் செல்வதில் தகராறு - அரிவாளால் வெட்டிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!
முருகனின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவில் பகுதி அருகே, பயணிகளை ஏற்றிச் செல்வதில் ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் வாக்குவாதம் காரணமாக இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருவரையொருவர் அரிவாளால் வெட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த முருகன் (51). இவர் கோவில் வாசல் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆறுமுகநேரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மாதவன் தினேஷ் (26). இவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஓட்டி வருகிறார். இந்நிலையில் மாதவன் தினேஷ் பயணிகளை ஏற்றிச் சென்று கோவில் வாசல் அருகே இறக்கிவிட்டு, அங்கிருந்து வேறு பயணிகளை ஏற்றத் தயாராகியுள்ளார். அப்போது கோவில் வாசல் ஆட்டோ ஸ்டாண்டு டிரைவர்கள் தங்களுக்கு வாடகை பாதிக்கப்படுவதாகக் கூறி அவரைத் தடுத்துக் கண்டித்துள்ளனர்.

இதனால் ஆனந்த முருகனுக்கும் மாதவன் தினேஷுவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஆனந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாதவன் தினேஷைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் மற்றும் ஆட்டோவில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.
உடனே சுதாரித்துக் கொண்ட மாதவன் தினேஷ், ஆனந்த முருகனிடமிருந்து அரிவாளைப் பிடுங்கி அவரையும் திரும்பச் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் இருவருமே பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

அங்குப் பாதுகாப்புக்காகவும் உதவிக்காகவும் நின்றிருந்த சக ஆட்டோ டிரைவர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டுத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆனந்த முருகன் பாளையங்கோட்டை நெல்லை அரசு மருத்துவமனைக்கும், மாதவன் தினேஷ் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் ஆன்மிகத் தலத்திற்கு வந்திருந்த பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துத் திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
