திருவள்ளூரில் பயங்கரம்.. தலைமைக் காவலரின் கார் மோதி 5 வயது சிறுமி பெற்றோர் கண்முன்னே உயிரிழப்பு!

 
சிறுமி விபத்து சிறுமி விபத்து

திருவள்ளூர் அருகே சென்னை - திருப்பதி புறவழிச்சாலையில் நிகழ்ந்த மிகக் கொடூரமான கார் விபத்தில், சாலையோரம் நின்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்துப் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய செவ்வாப்பேட்டை காவல் நிலையத் தலைமைக் காவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (32), பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா (28) திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்குத் தானிகா சாரா (5) என்ற 5 வயது மகள் இருந்தார்.

சிறுமி விபத்து

ரம்யா இன்று தனது மகளுடன், தன்னுடன் வேலை பார்க்கும் திருநின்றவூரைச் சேர்ந்த குணசேகரன் (35) என்பவரின் இருசக்கர வாகனத்தில் திருநின்றவூரிலிருந்து திருவள்ளூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். சென்னை - திருப்பதி புறவழிச்சாலையில் அயத்தூர் என்ற பகுதி அருகே சென்றபோது, குழந்தை தானிகா சாராவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். இதனால், குணசேகரன் உடனடியாகத் தனது இருசக்கர வாகனத்தை நெடுஞ்சாலையின் ஓரத்திலிருந்த மண் பாதையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.

குழந்தை சாலையோரம் நின்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அந்தத் துரதிர்ஷ்டவசமான நொடியில், அவ்வழியாக பயங்கர வேகத்தில் வந்த மாருதி எர்டிகா கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த குணசேகரன் மற்றும் குழந்தை தானிகா சாரா மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கொடூர விபத்தின் தாக்கத்தில், 5 வயதுக் குழந்தை தானிகா சாரா தூக்கி வீசப்பட்டு, பலத்த தலைக்காயத்துடன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இடுப்பு மற்றும் கால்களில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய குணசேகரனை அந்தப் பகுதி மக்கள் மீட்டு, உடனடியாகத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமி விபத்து

இந்த விபத்து குறித்துப் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் காரை ஓட்டி வந்தது திருநின்றவூரைச் சேர்ந்த விக்ரமன் என்பதும், இவர் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இவர் இன்று தனது குடும்பத்தினருடன் காரில் திருவாலங்காடு நோக்கிச் சென்ற போது தான் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, தலைமைக் காவலர் விக்ரமனை பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் முறைப்படி கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, காவலர் விக்ரமனை 30 நாட்களுக்குத் தொடர்ந்து காவல் நிலையத்தில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். பெற்றோரின் கண் முன்னாலேயே சாலையோரம் நின்றிருந்த 5 வயதுக் குழந்தை, காவலரின் காரின் வேகம் காரணமாகப் பலியான இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.