"பயங்கரவாதிகளே நடுங்குவர்": நாடாளுமன்றத்தில் அமித்ஷா குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உரை!
நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு வர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயப்படுகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், "அமித்ஷாவின் பெயரைக் கேட்டாலே பயங்கரவாதிகள் நடுங்குவார்கள்" என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி வருவதால் அவைகள் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்த அமளிக்கு மத்தியிலும் மக்களவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கங்களுக்குப் பதிலளித்துப் பேசிய கிரண் ரிஜிஜூ, "எந்த அமைச்சர் அவைக்கு வர வேண்டும், யார் பதிலளிக்க வேண்டும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும். விதிமுறைகளின்படி குறிப்பிட்ட அமைச்சரைத் தான் வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வற்புறுத்த முடியாது" என்றார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒன்றும் சாதாரணமானவர் அல்ல என்றும், அவரது பெயரைக் கேட்டாலே பயங்கரவாதிகள் நடுங்குவார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், அவைக்கு இடையூறு விளைவிப்பதையும் நாட்டைத் தவறாக வழிநடத்துவதையும் எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு வர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயப்படுகிறார்; அவர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும்" என்று விமர்சித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாகவே அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
