இனி காரில் பறக்கலாம்! எலான் மஸ்க்கின் டெஸ்லா ரோட்ஸ்டர் அறிமுகம்... வைரல் வீடியோ!

 
டெஸ்லா

 

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், பறக்கும் திறன் கொண்டதாகக் காட்சிப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ‘ரோட்ஸ்டர்’ மின்சார ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்தக் கார், காற்றில் பறந்து சாகசம் செய்த காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

காற்றில் பறந்து சாகசம் செய்த கார்

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் சோதனை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய ரோட்ஸ்டர் கார் வளைவான பாதையில் வேகமாகச் சென்று, தலைகீழாக நகர்ந்து, பின்னர் காற்றில் எழும்பி சுழன்று தரையிறங்கியது. காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்ட உறிஞ்சும் அமைப்பும், ஸ்பேஸ்எக்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உந்துவிசை அமைப்புகளும் இந்தச் சாகசத்தில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியை எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

2028-ல் உற்பத்தி தொடங்கத் திட்டம்

இந்த ரோட்ஸ்டர் கார் 2017-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டது. பலமுறை தள்ளிப்போன இதன் உற்பத்தி, 2028-ம் ஆண்டு தொடங்கும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு சுமார் 370 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் மற்றும் மிக வேகமான முடுக்கம் உள்ளிட்ட அம்சங்களும் இதில் இடம்பெறும் என நிறுவனம் கூறியுள்ளது.

இருப்பினும், நிகழ்ச்சியில் காட்டப்பட்ட குறுகிய நேரப் பறக்கும் சாகசம், கார் நீண்ட தூரம் விமானத்தைப் போலப் பறக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. பொதுச் சாலைகளில் இதைப் பயன்படுத்துவதற்கான சட்ட அனுமதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை. எனவே, இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது இன்னும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.