தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

 
தை மாத சிறப்புக்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தை மாதம் முதல் நாள் தட்சியாயண புண்ணிய காலம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகிறது. அதாவது 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வரும் சூரியன் தமது  பயணப்பாதையை தென் திசையில் இருந்து  வடதிசையில் மாற்றுவதே  உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க நாளான தை மாதம் முதல் நாள். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி எனும் ஆறு மாதங்களும் உத்தராயண புண்ணிய காலம். அதாவது தேவர்களின் பகல் காலம்.

பொங்கல்
இதனால் தான் தை மாதத்தின் தொடக்க நாளில்  சூரியனுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அறுவடையால் பெற்ற பலனுக்காக  மக்கள் விளைச்சலுக்கு உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் மாதம் தை மாதம். இந்நாளில் புதுப்பானையில் புது பச்சரிசி,  சர்க்கரை செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகள், பழவகைகள்  அனைத்தையும் சூரியனுக்கு படையலிட்டு வழிபடுகிறோம். 


அடுத்த நாள் விவசாயத்துக்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில்  மாடுகளை  குளிப்பாட்டி அலங்கரித்து மாட்டு தொழுவத்திலேயே பொங்கல் வைத்து  மாடுகளுக்கு படையலிட்டு வழிபாடு செய்வர். அதே போல் மாடுகளை பெருமைப்படுத்தும் வகையில்  ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என  விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். தை 3ம் நாள் காணும் பொங்கல் நாளில்  உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில்  கண்டு ஒற்றுமையை வலியுறுத்துவர். 


தைப்பூசம்: 

முருகன்
தைமாதத்தில்  பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்த நாளில் சிவபெருமான் மற்றும் முருகன் ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடப்படும். அன்றைய தினம் அம்பிகை மற்றும் முருகன் ஆலயங்களில் தெப்ப உற்சவம் நடைபெறும். 

தை அமாவாசை:  

நமது முன்னோர்கள்  ஆடி அமாவாசை நாளில் பூவுலகம் வந்து புரட்டாசியில் நம்முடன் தங்கி இருந்து உத்தராயண புண்ணிய காலமான தை அமாவாசையில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். இந்நாளில் நமது  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசி கிடைக்கப்பெறலாம். 

ரத சப்தமி:  

தை மாதத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதியில்  சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தை தொடங்குகிறார். இன்றைய தினம்  நதி அல்லது சமுத்திரக் கரைகளில் நீராடுவது சிறப்பு.  வீடுகளில் நீராடும்போது ஏழு எருக்கம் இலைகள், அட்சதையோடு சேர்த்துத் தலையில் வைத்துக்கொண்டு நீராடினால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறலாம்.
 

சபலா ஏகாதசி:

தை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி சபலா ஏகாதசி . இந்நாளில்  முழு உபவாசம் இருந்து, விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். 
புத்ரதா ஏகாதசி: தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி புத்ரதா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்து அடுத்த நாள் நெல்லிக்கனியுடன் அகத்திக்கீரை எடுத்து விரதத்தை நிறைவு செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம். 

பைரவ வழிபாடு:

தை மாதத்தில் வரும் முதல் செவ்வாய் கிழமை முதல் தொடங்கி செவ்வாய் கிழமைகளில்  பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபடவேண்டும்.  இதனால் சகல நன்மைகளும் கிடைக்கும். 

தை வெள்ளி :

தை மாதத்தில்  வரும் வெள்ளிக் கிழமையில் அம்பிகை வழிபாடு  மிகவும் சிறப்பு வாய்ந்தது . தை வெள்ளிக்கிழமைகளில்  அபிராமி அந்தாதி, சவுந்தர்ய லஹரி என அம்பிகை பாடல்களை பாடலாம்.  இத்தனை சிறப்பு உடைய மாதமான தை மாதத்தில்  திருநாட்களைக் கொண்டாடுவோம்.  வாழ்வில் வளம் பெறுவோம்

From around the web