அதிகாலையில் அதிர்ச்சி... தாய்லாந்து வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து... 11 பேர் உடல் கருகி பலி!

 
தாய்லாந்து

 

தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவான புகெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.புகெட்டின் மேற்குப் பகுதியில் உள்ள பிரபலமான படோங் கடற்கரை அருகே இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள வாகன வாடகை நிறுவனத்தைக் கொண்ட வணிகக் கட்டிடத்தில் இன்று அதிகாலை சுமார் 3.17 மணியளவில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ அருகிலிருந்த கட்டிடங்களுக்கும் பரவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் 15 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.