போர் விமானத்தை தனியாக இயக்கிய தாய்லாந்து ராணி! உலகளவில் அசத்தல் சாதனை!

 
தாய்லாந்து

 

 

தாய்லாந்து நாட்டின் ராணி சுதிடா, அதிநவீன போர் விமானத்தைத் தனியாக இயக்கிப் பறந்து சாதனை படைத்துள்ளார். அவரது கணவரும் தாய்லாந்து மன்னருமான மகா வஜிரலோங்கோர்ன், இந்த விமானப் பயணத்தை நேரில் பார்வையிட்டு ராணியை வாழ்த்தினார். தாய்லாந்தின் சூரத் தானி மாகாணத்தில் உள்ள ராயல் தாய்லாந்து விமானப்படையின் ‘விங் 7’ தளத்தில் இந்தப் பயணம் நடைபெற்றது. அக்டோபர் 8-ம் தேதி, சுவீடன் தயாரிப்பான ஒற்றை இருக்கை கொண்ட JAS 39C கிரிபென் போர் விமானத்தை ராணி சுதிடா தனியாக இயக்கிப் பறந்தார்.இதன் மூலம் போர் விமானத்தைத் தனியாக இயக்கிய முதல் ஆளும் ராணி என்ற சிறப்பைப் பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீவிரப் பயிற்சிக்குப் பிறகு சாதனை

இந்த விமானப் பயணத்திற்கு முன்பு ராணி சுதிடா, விமானப்படையினரின் மேற்பார்வையில் சிமுலேட்டர் பயிற்சிகளை மேற்கொண்டார். மேலும், இரண்டு பேர் பயணிக்கக்கூடிய கிரிபென் டி போர் விமானத்தில் சுமார் 10 மணி நேரப் பயிற்சியையும் பெற்றார்.

விமானத்தை வெற்றிகரமாக இயக்கி தரையிறங்கிய அவருக்கு, மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் மலர்க்கொத்து வழங்கி வாழ்த்தினார். கிரிபென் போர் விமானத்தை இயக்கியதற்கான சிறப்பு அடையாளச் சின்னத்தையும் வழங்கி கவுரவித்தார்.

1,188 மணி நேரத்திற்கும் மேலான அனுபவம்

ராணி சுதிடாவுக்கு விமானப் பயணம் புதிதல்ல. அவர் 2010-ம் ஆண்டு முதல் விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டார். போயிங் 737 உள்ளிட்ட பல்வேறு விமானங்களில் 1,188 மணி நேரத்திற்கும் மேலாகப் பறந்த அனுபவம் அவருக்கு உள்ளது. அரச குடும்பத்தின் விமானப் பயணங்களிலும் துணை விமானியாகப் பணியாற்றியுள்ளார்.

விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய அனுபவத்தில் தொடங்கி, பல்வேறு விமானங்களை இயக்கி, தற்போது போர் விமானத்தைத் தனியாக இயக்கியுள்ள ராணி சுதிடாவின் பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.