அதிமுக வேட்பாளராகத் தம்பிதுரை அறிவிப்பு.. பாமகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு - இன்று வேட்புமனு தாக்கல்!

 
தம்பிதுரை

தமிழக மாநிலங்களவை தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முனைவர் மு. தம்பிதுரை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கட்சியின் ஆட்சிமன்றக் குழு எடுத்த முடிவின் அடிப்படையில் தம்பிதுரை மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களில், சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணிக்கு 2 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

திமுக கூட்டணிக்குக் கிடைக்க வாய்ப்புள்ள 4 இடங்களுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர்: திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், இந்திய தேசிய காங்கிரஸ்: 1 இடம். தேமுதிகவுக்கு 1 இடம் (எல்.கே. சுதீஷ் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது).

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனையும், வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாள்: மார்ச் 9 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 16ம் தேதி நடைபெறுகிறது. 

முனைவர் தம்பிதுரை ஏற்கனவே தர்மபுரி மற்றும் கரூர் மக்களவைத் தொகுதிகளில் 5 முறை வெற்றி பெற்றுள்ள அனுபவம் வாய்ந்தவர். 2020ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அவரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைவதைத் தொடர்ந்து, அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.