தஞ்சாவூரில் ஏப்.27 விடுமுறை அறிவிப்பு... பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் துவக்கம்!

 
தஞ்சாவூர் தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் தஞ்சாவூர் தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல் 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், வரும் ஏப்.27ம் தேதி சிகர நிகழ்ச்சியாக சித்திரை தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை

இந்த விடுமுறை தினத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காது. இருப்பினும், அவசரத் தேவைகளுக்காக மாவட்டக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் செயல்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் முக்கியத் தேர்தல் பணிகளில் (மே 4 வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள்) ஈடுபடும் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 27 அன்று அதிகாலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரானது தஞ்சையின் நான்கு ராஜவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் மே மாதம் ஒரு சனிக்கிழமை வேலைநாளாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், தஞ்சை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தேரோட்டத்தைக் காணத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தஞ்சையில் குவிய திட்டமிடத் தொடங்கியுள்ளனர்.