தனியார் பஸ் கட்டணம் திடீர் உயர்வு! தஞ்சை–பட்டுக்கோட்டையில் ரூ.4 கூடுதல் வசூல்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை–பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் சில தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அரசு பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளும் முக்கியமான போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்றன. கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு தனியார் பேருந்துகளுக்கான கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதால் தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தஞ்சை–பட்டுக்கோட்டை வழித்தடத்தில் சில தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை பழைய பஸ் நிலையம் செல்ல இதுவரை ரூ.31 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது சில பேருந்துகளில் ரூ.35 வசூலிக்கப்படுகிறது. இதேபோல் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையம் செல்லும் கட்டணம் ரூ.36-ல் இருந்து ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கிடையே, தமிழக அரசின் ‘வெற்றி பயணம்’ திட்டத்தின் மூலம் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதால், தனியார் பேருந்துகளுக்கு பயணிகள் வருகை குறைந்துள்ளதாக உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டீசல், ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.அதே நேரத்தில், அரசின் அதிகாரப்பூர்வ அனுமதி அல்லது அறிவிப்பு வரும் வரை தனியார் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என தாங்கள் பணியாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளதாக சில பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
