"இலவச விளம்பரத்திற்கு நன்றி!" - 30 அடி உயர கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிப்பு விவகாரத்தில் அபிஜீத் திப்கே பதிலடி!
புதுடெல்லி பீதாம்புராவில் நடைபெற்ற ராம்லீலா விழாவில் 30 அடி உயரக் கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிக்கப்பட்ட விவகாரத்தில், ஆம் ஆத்மி அளித்த புகாரைத் தொடர்ந்து சி.ஜே.பி நிறுவனர் அபிஜீத் திப்கே கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஸ்ரீ கேசவ் ராம்லீலா கமிட்டி சார்பில் நடைபெற்ற தசராவில், ராவணனின் உருவபொம்மையுடன் தூய்மை இந்தியா விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் அசுத்தத்தின் அடையாளமாக 30 அடி உயரக் கரப்பான்பூச்சி பொம்மை எரிக்கப்பட்டது. இதற்கு ஆம் ஆத்மியின் டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி டெல்லி காவல் நிலையத்திலும், துணை நிலை கவர்னரிடமும் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், இந்தச் சர்ச்சை குறித்து சி.ஜே.பி நிறுவனர் அபிஜீத் திப்கே தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “இலவச விளம்பரத்திற்கு நன்றி!” என்று சுருக்கமாகப் பதிவிட்டுப் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக சி.ஜே.பி வழக்கறிஞர் ரத்னா சிங் தனது பதிவில், "தசரா நாளில் கரப்பான்பூச்சி உருவத்தை எரிப்பது, ஆளுங்கட்சி எந்த அளவிற்குப் பதற்றத்தில் உள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது. எங்களை ஒரு வலுவான போட்டியாளராகக் கருதும் அளவிற்கு நாங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம் என்பதை அறிவதில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் மேலதிக விவாதங்களை உருவாக்கியுள்ளது.
