கம்யூனிஸ்ட் அலுவலகங்களுக்கு விரைந்த விஜய் - ஆதரவு அளித்ததற்கு நேரில் நன்றி!

 
விஜய் விஜய்

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆதரவைத் திரட்டுவதில் தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) ஆகிய இரு கட்சிகளும் தவெக-விற்குத் தங்களது ஆதரவை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இதுவரை மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோர விஜய் நேரில் செல்லவில்லை என்றும், இது அரசியல் முதிர்ச்சியின்மை என்றும் ஒரு தரப்பினர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தவெக தலைவர் விஜய் இன்று மாலை இடதுசாரி அலுவலகங்களுக்குச் செல்ல உள்ளார்.

ராஜ்யசபா விஜய்

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான 'பாலன் இல்லம்' சென்று, அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு விஜய் நன்றி தெரிவிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கும் நேரில் சென்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

இன்று மாலை 4:30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்தச் சந்திப்புகள் நடைபெற உள்ளன. இடதுசாரி கட்சிகளின் ஆதரவு கடிதங்களை நேரில் பெற்றுக்கொண்டு, அதன் பின்னரே அவர் ஆளுநர் மாளிகைக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்

காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (1) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவு உறுதியாகியுள்ளதால், தவெக-வின் பலம் தற்பொழுது 116-ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்களே தேவை என்ற நிலையில், விஜய்யின் இந்த நேரில் சந்திக்கும் முடிவு மற்ற கட்சிகளையும் (குறிப்பாக விசிக) ஈர்க்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.