“மக்களாட்சியை ஆதரித்த அனைவருக்கும் நன்றி” - முதல்வர் விஜய் உருக்கம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகப்பாரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், வாக்களித்த தமிழக மக்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது நன்றியறிதலை ஒரு அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் தவெக 34.92% வாக்குகளைப் பெற்று, தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கட்சி தொடங்கப்பட்ட வெறும் மூன்றே ஆண்டுகளுக்குள் இத்தகைய பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றிருப்பது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது அறிக்கையில் முதலமைச்சர் விஜய் , "மக்களாட்சியை ஆதரித்து, மாற்றத்தை விரும்பி வாக்களித்த ஒவ்வொரு தமிழர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். இது மக்களாட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. தேர்தல் களத்தில் வீசிய 'விசில் அலை' இப்போது 'வெற்றி அலையாக' மாறியுள்ளது. ஒருவிரல் புரட்சி என்பது இன்று 'விசில் புரட்சியாக' உருமாறி நமக்கான அங்கீகாரத்தை ஈட்டித் தந்துள்ளது" என அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மக்களின் இந்த அதீத நம்பிக்கைக்குக் கைமாறாக, தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தித் தனது அரசு அர்ப்பணிப்புடன் செயல்படும் என அவர் உறுதியளித்துள்ளார். அரசியல் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செய்து தரப்போவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று ஆண்டுகளில் ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சியாகத் தடம் பதித்துள்ள தவெக-வின் இந்த வெற்றி, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்திற்கான தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.
