தாராபுரத்தில் பிரச்சாரத்தின் போது சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தவெக எம்.எல்.ஏ. - வைரலாகும் வீடியோ!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அமைச்சர்களும் தீவிர சைக்கிள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் பரப்புரையின் நடுவே கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரின் வெற்றியை வலியுறுத்தி, கட்சியின் முக்கியத் தலைவர்களும் தொண்டர்களும் உற்சாகமாகச் சைக்கிளில் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இந்தச் சைக்கிள் பேரணியின்போது, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா சைக்கிளை ஓட்டிக் கொண்டே அருகில் வந்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் ஏதோ பேச முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சைக்கிள் நிலை தடுமாறியது.

கட்டுப்பாட்டை இழந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத்மிஸ்ரா கீழே விழுந்ததைக் கண்ட அருகில் இருந்த தவெக தொண்டர்களும் நிர்வாகிகளும் உடனடியாக ஓடிவந்து அவரைப் பத்திரமாகத் தூக்கிவிட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதுடன், பின்னர் பிரச்சார ஊர்வலம் தொடர்ந்தது.
