அரசுப் பள்ளி வகுப்பறையில் 'ரீல்ஸ்' விவகாரம் - தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கட்சியில் இருந்து நீக்கம்!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களுக்கு மத்தியில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி வகுப்பறையைப் பயன்படுத்தி 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கிய தவெக முக்கிய நிர்வாகி ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கிடைத்துள்ள விபரங்களின்படி, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள தளவாரம்பூண்டி கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பகுதியின் தவெக ஒன்றிய செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த ராஜேஷ், பள்ளி விடுமுறை நாளான நேற்று, காலி வகுப்பறை ஒன்றிற்குள் அனுமதியின்றி நுழைந்துள்ளார்.
அங்குள்ள கரும்பலகையின் (பிளாக் போர்டு) முன்பாக முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை வைத்து, சினிமாப் பாடல் பின்னணியில் 'ரீல்ஸ்' வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் பதிவிட்டுள்ளார்.

கல்வி கற்கும் புனிதமான அரசுப் பள்ளி வகுப்பறையை, அரசியல் ஆதாயத்திற்காகவும் சுய விளம்பரத்திற்காகவும் பயன்படுத்திய ராஜேஷின் இந்தச் செயலுக்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியதை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட தவெக தலைமையும், கோட்டை மேலிடமும் உடனடியாக இதில் தலையிட்டன. கட்சியின் சட்டதிட்டங்களுக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ராஜேஷை, தவெக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கித் தவெக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும், தமிழக அமைச்சருமான தென்னரசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
