117 நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி... தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை வீடுபுகுந்து தூக்கிய போலீசார்!

 
கள்ளக்குறிச்சி அருள்விக்னேஷ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்த வழக்கில், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக  சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் இன்று மாலை கைது செய்யப்பட்டார். விசாரணை அதிகாரியான திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார், கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வரும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு, த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது செல்போனிலிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், மது போதையில் ஆட்சியரின் வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் கடந்த ஜூலை 31-ஆம் தேதி முதல் சமூக வலைதளங்களில் தகவல் பரவிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் இப்புகாரை த.வெ.க.வினர் மறுத்து வந்த நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏ.-வைக் கைது செய்து பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

கள்ளக்குறிச்சி அருள்விக்னேஷ

அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வு, ஆளும் த.வெ.க. அரசுக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதையடுத்து வழக்கு வேகம் பெற்ற நிலையில், கடந்த நவம்பர் 23-ஆம் தேதி பெண் ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளும் இடம்பெற்றுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவின்படி இவ்வழக்கின் விசாரணைப் பொறுப்பு திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டு, ஐ.ஜி. காமினியின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வந்தது. இரண்டு நாட்களாக அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மாலை அவர் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டார்.

பத்மஜா கள்ளக்குறிச்சி

கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுச் சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 117 நாட்களுக்குப் பிறகு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அருள் விக்னேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.