300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்!

 
பூண்டிமாதா

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற பூண்டிமாதா பேராலயத்தின் 300-வது ஆண்டு அன்னையின் பிறப்புப் பெருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியுள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர் (கான்ஸ்டன்டைன் பெஸ்கி) அவர்களால் கட்டப்பட்ட இந்தப் பேராலயம் பசிலிக்கா அந்தஸ்து பெற்றதுடன், இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒரு பகுதியைக் கொண்டுள்ள ஆன்மிகச் சிறப்புமிக்க தலமாகும். ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழாவின் தொடக்கமாக, மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது. பின்னர் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் கொடியைப் புனித செய்து பேராலயத்தின் பிரம்மாண்ட கொடிமரத்தில் ஏற்றி வைத்தார்.

பனிமய மாதா

கொடி ஏற்றப்படும்போது திரண்டு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் "மரியே வாழ்க, அன்னையே வாழ்க" என பக்திப் பரவசத்துடன் கோஷமிட்டு மாதாவை வழிபட்டனர். இந்தத் திருவிழா தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மல்லிகைப்பூ அலங்கார ஆடம்பரத் தேர்பவனி வரும் செப்டம்பர் 8-ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ் மற்றும் ஆன்மிகத் தந்தைகள் கலந்துகொண்டனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான கிறிஸ்தவப் பக்தர்கள் வருகை தந்து மாதாவின் ஆசி பெற்றனர்.