வெடித்து தீப்பற்றிய ஏசி... நூலிழையில் உயிர்தப்பிய வட்டார வளர்ச்சி அலுவலர்!

 
ஏசி வெடித்து தீப்பிடித்து

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய (பிடிஓ) அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரின் அறையில் இருந்த ஏர் கண்டிஷனர் திடீரென வெடித்துத் தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலை செல்வன் என்பவர் இன்று காலை தனது அறையில் பணியில் இருந்தார். அப்போது அவரது அறையில் இயங்கிக் கொண்டிருந்த ஏ.சி. இயந்திரம் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

ஏ.சி. வெடித்த அதிர்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலை செல்வன் உடனடியாகத் தனது அறையிலிருந்து வெளியேறித் தப்பித்தார். தீ விபத்து ஏற்பட்ட உடனேயே ஊழியர்கள் விழிப்புடன் செயல்பட்டதால், இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். மின்கசிவு காரணமாக ஏ.சி. வெடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.