ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீரென வெடித்து தீப்பற்றிய ஏ.சி., அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய வட்டார வளர்ச்சி அலுவலர்!
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரின் அறையில் ஏ.சி. இயந்திரம் திடீரென வெடித்துச் சிதறித் தீப்பற்றியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலை செல்வன் தனது அறையில் பணியில் இருந்தபோது, அங்கிருந்த ஏ.சி. திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துத் தீப்பற்றி எரிந்தது. ஏ.சி. வெடித்த உடனே வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலை செல்வன் சுதாரித்துக் கொண்டு சுதாரிப்பாக அறையை விட்டு வெளியேறியதால், எவ்விதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.
உடனடியாகத் தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் அல்லது காயமும் ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக ஏ.சி. வெடித்ததா அல்லது இயந்திரத்தில் ஏற்பட்ட வேறு ஏதேனும் கோளாறு காரணமா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
