இரண்டாக உடைந்தது அதிமுக... சபாநாயகர் எடுக்கும் முடிவு என்ன? - சட்ட நிபுணர்கள் விளக்கம்!
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பும், பெரும்பான்மை ஆதரவு தன்னிடம் இருப்பதாகக் கூறும் வேலுமணி தரப்பும் தனித்தனியாகச் சபாநாயகர் கருப்பையாவிடம் மனு அளித்துள்ளனர்.
இந்தச் சிக்கலான சூழலில், சட்டமன்ற விதிகளின்படி சபாநாயகர் எந்த மாதிரியான முடிவை எடுப்பார் என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற விதிகளின்படி, ஒரு கட்சியின் தலைவரைத் தீர்மானிப்பதில் கட்சித் தலைமையின் பரிந்துரையும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் மிக முக்கியமானவை. சபாநாயகர் முதலில் அதிமுகவின் உட்கட்சி சட்ட விதிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, சட்டமன்றத் தலைவரை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதை உறுதி செய்வார்.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின்படி, வெறும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை மட்டுமே தலைவரைத் தீர்மானிக்காது; கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையின் அங்கீகாரம் அவசியம் எனக் கருதப்படுகிறது.

கட்சியின் பொதுச் செயலாளருக்கே ‘கொறடா’வை நியமிக்கும் அதிகாரமும், சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் சட்டப்படி உள்ளது. ஒருவேளை எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டால், அது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும்.
எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பதால், அவர் அளிக்கும் கடிதமே சட்டப்படி வலுவானதாகக் கருதப்படும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சபாநாயகரின் இறுதி முடிவே இந்த அரசியல் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
