அதிமுகவும் தயாராகுது... சேலத்தில் ஈபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர்கள் அவசர ஆலோசனை.. தேர்தல் களத்தில் அடுத்த மூவ் என்ன?

 
எடப்பாடி எடப்பாடி

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 23-ஆம் தேதி தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாள் நெருங்குவதால், கடந்த இரண்டு நாட்களாகக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவரைச் சந்தித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தம்பிதுரை ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினர்.

எடப்பாடி

இன்று முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.பி.முனுசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஈபிஎஸ்ஸைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின் போது முக்கியமாக மூன்று விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன:

வாக்கு எண்ணிக்கை நாளில் மையங்களில் முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், வாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் குளறுபடிகள் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது மாவட்ட வாரியாகத் தொண்டர்களை ஒருங்கிணைப்பது மற்றும் அமைதி காப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

எடப்பாடி இபிஎஸ் பொதுக்குழு

ஒருவேளை இழுபறி நிலை ஏற்பட்டால் அல்லது கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நகர்வுகள் குறித்தும் பூர்வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். "வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடைசி ரவுண்டு முடிந்து வெற்றிச் சான்றிதழைப் பெறும் வரை முகவர்கள் மிக விழிப்புடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இடையில் மையத்தை விட்டு வெளியேறக் கூடாது" என அவர் கட்டளையிட்டுள்ளார்.