சிதறுகிறது அதிமுக... “எங்களை நீக்க உங்களுக்கு அதிகாரமில்லை!" - இபிஎஸ்ஸுக்கு எதிராக சி.வி.சண்முகம் ஆவேசம்!

 
அதிமுக இபிஎஸ் உடைகிறது விரிசல் அதிமுக இபிஎஸ் உடைகிறது விரிசல்

அதிமுகவில் மீண்டும் ஒரு 'தர்மயுத்தம்' வெடித்துள்ளதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில், கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை முறை மாற்றப்பட்டு, எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையைக் கைப்பற்றிய போது அவருக்குப் பக்கபலமாக இருந்தவர்களில் சி.வி.சண்முகமும் ஒருவர். ஆனால், இப்போது அவரே, "அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரியதன் பலனை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்" என விரக்தியுடன் தெரிவித்துள்ளார். இபிஎஸ் பொறுப்பேற்றதில் இருந்து கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதே இதற்குச் சாட்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக அதிமுக வ்ச் எடப்பாடிஸ்டாலின்

தேர்தல் தோல்விகளுக்கான காரணத்தை அடுக்கிக் கொண்டே சென்ற சி.வி.சண்முகம், "கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடமோ அல்லது முக்கிய நிர்வாகிகளிடமோ ஆலோசிக்காமல், தன்னிச்சையாக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே பெரிய வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது" என்றார். கட்சியின் முடிவுகள் ஜனநாயக முறையில் எடுக்கப்படுவதில்லை என்ற அதிருப்தி இப்போது பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

கட்சி ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நிர்வாகிகள் நீக்கப்படுவது குறித்துப் பேசிய அவர், "கட்சியில் இருந்து எங்களை நீக்க பொதுச்செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை" எனக் கூறியுள்ளார். அதிமுகவின் சட்ட விதிகளின்படி, பொதுச்செயலாளரின் அதிகாரம் மற்றும் வரம்புகள் குறித்து அவர் எழுப்பியுள்ள இந்த கேள்வி, கட்சியின் தலைமைக்கு மிகப்பெரிய சட்டச் சவாலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி.வி.சண்முகம்

சமீபகாலமாக அதிமுகவின் தோல்விகளை முன்னிறுத்தி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் விடுத்து வந்த விமர்சனங்களை விட, கட்சிக்குள் இருந்தே கிளம்பியுள்ள சி.வி.சண்முகத்தின் இந்த குரல் இபிஎஸ் தரப்பை நிலை குலையச் செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி பலவீனமடைந்து வருவதாகச் சி.வி.சண்முகம் வெளிப்படையாகப் பேசியிருப்பது, கட்சியில் அடுத்தக்கட்ட பிளவு ஏற்படுமா அல்லது தலைமை மாற்றம் கோரப்படுமா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பலமுறை பிளவுபட்ட அதிமுக, தற்போது சி.வி.சண்முகத்தின் இந்த திடீர் போர்க்கொடியால் மீண்டும் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. "கட்சித் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத தலைமைக்கு முடிவுரை எழுதப்படும்" என்ற தொனியில் அமைந்துள்ள அவரது பேச்சு, தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.