"அதிமுக கோட்டையே காலியாகிவிட்டது; இபிஎஸ் அதை லெட்டர் பேட் கட்சியாக மாற்றிவிட்டார்" - அமைச்சர் நிர்மல்குமார்

 
நிர்மல்குமார்

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றிகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்தும், தவெக அரசின் நான்கு மாத சாதனைகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இந்த இடைத்தேர்தல் வெற்றிகள் முதல்வர் விஜயின் நான்கு மாத கால சிறப்பான நல்லாட்சிக்கான மக்கள் அங்கீகாரம் என்று பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்துள்ளதாகவும், அந்த மாற்றத்தை தவெக அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவெக நிர்மல்குமார்

"எடப்பாடி பழனிசாமி தனது சொந்தச் சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அதிமுகவைக் தனது கம்பெனி போலப் பயன்படுத்தி, ஒரு லெட்டர் பேட் கட்சியாக மாற்றிவிட்டார்" என்று கடுமையாக விமர்சித்தார். எந்தக் காலத்திலும் வீழ்ச்சியைச் சந்திக்காத அதிமுகவின் கோட்டைகள் தற்போது முழுமையாகக் காலியாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து விலகி ராஜினாமா செய்து வருவதற்கு எடப்பாடி பழனிசாமியின் இதுபோன்ற சுயநலமான செயல்பாடுகள்தான் காரணம் என்றார். தேர்தல்களின் போது திமுகவும் அதிமுகவும் வெளிப்படையாக மோதிக்கொண்டாலும், இரண்டும் மறைமுகக் கூட்டாளிகள்தான் என்றும், பிரச்சாரத்தின் போது அவர்கள் ஒருவரையொருவர் தீவிரமாக விமர்சித்துக்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.