"ஆலையில் அம்மோனியா வாயுக்கசிவு முற்றிலும் கட்டுக்குள் உள்ளது" - நேரில் ஆய்வு செய்த பின் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!

 
வாயு மருத்துவமனை

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அமைச்சர் ராஜ்மோகன் இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விபத்து நடந்த ஆலையில் வாயுக்கசிவு முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் ராஜ்மோகன், அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கன்னிகைப்பேர் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு விபத்து குறித்துத் தகவலறிந்த உடனே தீயணைப்புத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு ஆலைக்குள் நிலவி வந்த வாயுக்கசிவை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கூடுதல் ஆபத்து எதுவும் இல்லை.

அமோனியா வாயு கசிவு மருத்துவமனை

இந்த விபத்தால் மொத்தம் 64 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்குத் தேவையான அதி உயர் மருத்துவச் சிகிச்சைகள்  தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர்மட்டச் சிகிச்சைகளை இலவசமாக உறுதி செய்யுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

வாயு

"விபத்தில் சிக்கியவர்களில் தற்போது 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர்ந்த கண்காணிப்பில் உள்ளனர். குறிப்பாகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள 7 தொழிலாளர்களுக்கு தற்போது வெண்டிலேட்டர் மூலமாகச் செயற்கை சுவாசச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்குத் தேவையான அனைத்து மருந்து, மாத்திரைகளும் தடையின்றிக் கிடைக்க அரசு ஆவன செய்துள்ளது" என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.