"ரூ.2,000 உரிமைத் தொகை.. ரூ.8,000 இலவச கூப்பன் என்னைக் கவர்ந்தது!" - நடிகை ரோகிணி பிரசாரம்!

 
ரோகிணி ரோகிணி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான ரோகிணி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

புதுச்சேரியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய ரோகிணி, திமுக தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான திட்டங்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லத்தரசிகளுக்குப் பெரும் பொருளாதாரப் பலத்தைத் தரும் என அவர் தெரிவித்தார்.

ரோகிணி

திமுக அறிவித்துள்ள ரூ.8,000 மதிப்பிலான இலவச கூப்பன் திட்டம் தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் கூறினார். இந்த இலவச கூப்பன் திட்டம் குறித்து ரோகிணி மேலும் பேசுகையில், "இந்த ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் மூலமாகப் பெண்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய சாமான்களை மாற்றிக் கொள்ளவும் முடியும், அல்லது தங்களுக்குத் தேவையான புதிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ளவும் முடியும். இது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்," என அவர் விளக்கமளித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்காக வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிக்கும் ரோகிணிக்கு, பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்களால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாக்களிக்குமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.