தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை - மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களை குறிவைத்து அதிரடி!
தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த சோதனையைத் தொடங்கியுள்ளனர். மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தலைநகர் சென்னையின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் முற்றுகையிட்டு தங்களது சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அலுவலகங்களில் கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் முறைகேடுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் இந்த சோதனை நீடித்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகராட்சி, திருப்பத்தூர் நகராட்சி மற்றும் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகங்களிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 40 இடங்களில் இந்தச் சோதனை அரங்கேறி வருவது அரசு நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
