“விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்...” - திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது!

 
திருப்பரங்குன்றம் தீபத்தூண்

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் இன்று  மாலை தீபம் ஏற்றப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மேற்பார்வையில் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே தீபம் ஏற்றப்பட்டபோது பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க, இன்று மாலை 5 மணிக்குத் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக 30 கிலோ நெய், 50 மீட்டர் நீள பருத்தி திரி மற்றும் 5 கிலோ கற்பூரம் ஆகியவை மேள - தாளங்களுடன் மலை மீது கொண்டு செல்லப்பட்டன.

திருப்பரங்குன்றம்

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் தற்காலிக நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோரின் மேற்பார்வையில் தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கடந்த நவம்பர் 24 கார்த்திகை தீபத் திருநாளன்று மலை உச்சித் தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டிருந்த போதிலும், வழக்கமான தீபமண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டதால் கடந்த ஒரு வாரமாக விவாதங்களும் போராட்டங்களும் நீடித்தன. நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், இன்று மலை உச்சியில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் மலைப்பகுதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹா ஆகிய வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய ரிசர்வ் காவல் படை  ஈடுபடுத்தப்பட்டது. அதன்படி, கோயம்புத்தூரிலிருந்து விரைவு அதிரடிப்படை பட்டாலியன் திருப்பரங்குன்றம் வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதுடன், அப்பகுதி முழுவதும் பலத்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.