அருள்விக்னேஷ் விவகாரம்... தவெக அரசுக்கு அமித் ஷா நெருக்கடி!
கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பித் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் புகாரில், த.வெ.க. எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆளும் தவெக அரசுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்படக்கூடுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வலுத்து வருகிறது.
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிரான துன்புறுத்தல் புகார், அதனைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுந்த கேள்விகள் ஆகியவை இந்த விவகாரத்தைத் தேசிய அளவில் கவனிக்கத்தக்கதாக மாற்றியுள்ளன. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. தொடர்பான விவகாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீதே மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருப்பது, அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் சட்டம் - ஒழுங்கு தொடர்பான விவாதங்களைக் கூர்மையாக்கியுள்ளது. முன்னதாக ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்ததும், பின்னர் தமிழக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதும் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருந்த நிலையில், தற்போது வழக்குப்பதிவுக்குப் பிறகான நகர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.
ஒருபுறம் எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏ.-வை உடனடியாகக் கைது செய்யவும், பதவியிலிருந்து நீக்கவும் வலியுறுத்தி வருகின்றன; மறுபுறம் அவர் ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.

இந்தப் புகார் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்தோ அல்லது ஆளுநர் மாளிகை வழியாகவோ கூடுதல் விளக்கங்கள் கோரப்படுமா, அல்லது வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் வேறு ஏதேனும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுமா என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. இதனால் த.வெ.க. அரசுக்குச் சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான நெருக்கடிகள் தொடர்வதாகப் பார்க்கப்படுகிறது.
