தொடரும் அட்டூழியம்... தாய், குழந்தையைக் கடத்தி ஆபாச படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகி - அண்ணாமலை கண்டனம்!
சேலத்தில் நிலத் தகராறு காரணமாக தாய் மற்றும் பெண் குழந்தையைக் கடத்தி, ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தில், தமிழகத்தில் தொடரும் பெண்களூக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் நிலத் தகராறு காரணமாக ஒரு தாயையும் அவரது பெண் குழந்தையையும் கடத்திச் சென்று, அவர்களை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. இதில் திமுக கொண்டலாம்பட்டி பகுதி அவைத்தலைவராக இருக்கும் செந்தூர் கார்த்தி மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
"ஆளுங்கட்சி என்ற மமதையிலும், அரசியல் செல்வாக்கு போர்வையிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆபாசப் புகைப்படம் எடுத்து மிரட்டியிருப்பது வெட்கக்கேடானது" என குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதற்கு இத்தகைய சமூக விரோதிகளே காரணம் என்றும், இவர்களை மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
