"ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும்.." - நெதன்யாகு முழக்கம்!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை இஸ்ரேல் வரவேற்றுள்ள போதிலும், லெபனான் விவகாரத்தில் தனது ராணுவ நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது. வடக்கு இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை லெபனானில் தாக்குதல்கள் தொடரும் எனப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
லெபனானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசிய நெதன்யாகு, "இன்னும் தீவிரத்துடனும், துல்லியத்துடனும், மனவுறுதியுடனும் ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும். எப்போதெல்லாம் தேவையோ, அப்போதெல்லாம் எமது ராணுவம் ஹிஸ்புல்லாவைத் தாக்கும்."

"இஸ்ரேல் மக்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை நாங்கள் தாக்குவோம். வடக்கு இஸ்ரேல் குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பை நாங்கள் முற்றிலும் மீட்டெடுக்கும் வரை இந்தத் தாக்குதல் ஓயாது."
ஈரானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ள போதிலும், லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேச அளவில் போர்நிறுத்த முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், லெபனான் எல்லைகளில் பதற்றம் தணியவில்லை.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அமெரிக்கா - ஈரான் இடையிலான 2 வார கால ஒப்பந்தத்தில் லெபனான் நாடு இடம் பெறவில்லை. இதன் காரணமாக, ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நாளை இஸ்லாமாபாத்தில் நடைபெறும் உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் ஈரான் - அமெரிக்கா இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், லெபனான் எல்லைப் பகுதியில் அமைதி திரும்புவது இஸ்ரேலின் முடிவிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
