வீட்டின் முன் கார் நிறுத்த இனி வருஷத்துக்கு ₹25,000 கட்டணம் - பெங்களூரு மாநகராட்சியின் புதிய வரைவுத் திட்டம்!

 
கார் பார்க்கிங்

பெங்களூரு நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்கற்ற வாகன நிறுத்துதலை ஒழுங்குபடுத்தவும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் (GBA) புதிய வாகன நிறுத்தல் கொள்கைக்கான (Draft Parking Policy) வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சொந்தமாக வீடுகளில் பார்க்கிங் வசதி இல்லாதவர்கள், தங்களது வீட்டின் முன்புறம் உள்ள பொதுச் சாலையில் சிறிய கார்கள்  நிறுத்த ஆண்டுக்கு ₹15,000, செடான் கார்கள் நிறுத்த ஆண்டுக்கு ₹20,000, எஸ்.யு.வி கார்கள் நிறுத்த ஆண்டுக்கு ₹25,000 என வாகனங்களை நிறுத்த இனி ஆண்டுதோறும் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

வீட்டின் முன் கார் நிறுத்த அனுமதி கோரும் போது, அந்த காரை நிறுத்துவதால் சாலையில் மற்ற வாகனங்கள் செல்வதற்குப் போதிய இடைவெளி உள்ளதா என்பதை ஜி.பி.ஏ மார்ஷல்கள் நேரில் ஆய்வு செய்து சான்றளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

பார்க்கிங்

நகரச் சாலைகள் 'ஏ, பி, சி' என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட இடங்களில் கார்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் (இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது).

'ஏ' பிரிவு சாலைகள் (முக்கிய சாலைகள்): மணி நேரத்திற்கு ₹80, 'பி' பிரிவு சாலைகள்: மணி நேரத்திற்கு ₹60, 'சி' பிரிவு சாலைகள்: மணி நேரத்திற்கு ₹40. இரண்டு மணி நேரத்திற்கு மேல் வாகனங்களை நிறுத்தி வைத்தால் கட்டணம் ஒன்றரை மடங்கு (1.5x) வரை உயர்த்தப்படும்.

பொது வாகன நிறுத்த வளாகங்களில் (Off-street Parking) கார்களை நிறுத்த மாதம் ₹2,000 முதல் ₹4,000 வரையிலும், இருசக்கர வாகனங்களுக்கு மாதம் ₹1,000 முதல் ₹2,000 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 8:00 மணி வரை வாகனங்களை நிறுத்தினால் மாதாந்திரக் கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படும்.

காலியாக உள்ள நிலங்களைப் பொது வாகன நிறுத்தங்களாக மாற்ற முன்வரும் நில உரிமையாளர்களுக்கு 35 ஆண்டுகள் வரை சொத்து வரியில் விலக்கு அளிக்கப்படும். இந்த வரைவு திட்டம் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் மாநகராட்சிக்கு அனுப்பலாம். பெறப்படும் கருத்துகளைப் பரிசீலித்த பிறகே இத்திட்டம் இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.