10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகப் பெரிய மாற்றம்... மொத்த மதிப்பெண்கள் குறைப்பு!
கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், மொத்த மதிப்பெண் கணக்கிடும் முறையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்த மதிப்பெண் 625 ஆக இருந்தது. இனி இது 525 மதிப்பெண்களாகக் குறைக்கப்படுகிறது.
மூன்றாவது மொழிப் பாடத்திற்கு வழங்கப்பட்ட 100 மதிப்பெண்கள் இனி மொத்த மதிப்பெண் கணக்கில் சேர்க்கப்படாது. இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு, உருது போன்ற மூன்றாம் மொழிப் பாடங்களுக்கு இனி மதிப்பெண்கள் வழங்கப்படாது. அதற்குப் பதிலாக A, B, C, D போன்ற ‘கிரேடு’ முறை மட்டுமே பின்பற்றப்படும். இந்த மாற்றம் கர்நாடக மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த விதியில் எவ்வித மாற்றமும் இல்லை.

கர்நாடக பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் மது பங்காரப்பா இதுகுறித்து கூறுகையில், "மாணவர்கள் மூன்று மொழிகளையும் கற்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆனால், மூன்றாவது மொழியின் மதிப்பெண்கள் அவர்களது மொத்த சதவீதத்தைப் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த 'கிரேடு' முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 2026-ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்விலிருந்து உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று தெரிவித்தார்.

புதிய மதிப்பெண் கணக்கீடு (உத்தேசமாக):
முதல் மொழி (First Language) - 125 மதிப்பெண்கள், இரண்டாம் மொழி (Second Language) - 100 மதிப்பெண்கள், கணிதம் - 100 மதிப்பெண்கள், அறிவியல் - 100 மதிப்பெண்கள், சமூக அறிவியல் - 100 மதிப்பெண்கள். மொத்தம்: 525 மதிப்பெண்கள் (மூன்றாம் மொழிக்கு 100 மதிப்பெண்கள் இருந்தாலும், அது கிரேடாக மட்டுமே சான்றிதழில் இடம்பெறும், மொத்தக் கணக்கில் வராது).
