கைவிட்ட பாஜக... தவெகவில் இணைகிறார் சரத்குமார்!
கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகர் சரத்குமார், தற்போது அக்கட்சியில் தனக்குரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவில் இணையும் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி தனக்கோ அல்லது தனது ஆதரவாளர்களுக்கோ கட்சி அமைப்பில் உரிய பொறுப்புகளும் அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பாஜக தேசிய மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள் மாற்றத்திலும் அவரது பெயர் இடம்பெறாதது, அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் தொடர விரும்பாத சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைவது குறித்து அவர் பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. மற்றொரு புறம், தனது பழைய ஆதரவாளர்களைத் திரட்டி மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியைப் புதுப்பித்துச் செயல்படலாமா என்பது குறித்தும் தனது ஆதரவாளர்களுடன் அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
