பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்றது... எஞ்சின் கோளாறால் பயணிகள் கடும் அவதி!

 
rail rail

சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த பிருந்தாவன் விரைவு ரயில் இன்று காலை திடீரென எஞ்சின் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வழக்கம்போல் காலை 7.40 மணிக்கு இந்தப் புறப்பட்ட ரயில், அரக்கோணம் அருகே உள்ள மோசூர் ரயில் நிலையம் வந்தபோது எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரயில் மேலே நகர முடியாமல் தண்டவாளத்திலேயே நின்றதால் ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் செய்வதறியாமல் திகைத்துப் போயினர்.

தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எஞ்சினைச் சரி செய்யப் பல மணி நேரம் போராடியும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் பழுதடைந்த எஞ்சினுடன் ரயிலை மீண்டும் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு மெதுவாகக் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய சூழல் உருவானது. அங்கு மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டுப் பயணத்தைத் தொடர அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்தத் திடீர் கோளாறு காரணமாகச் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் காலதாமதமாக இயக்கப்பட்டது. இதனால் பெங்களூரு செல்ல வேண்டிய பயணிகள் தங்களது அடுத்தகட்ட பயணத் திட்டங்களை மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மாற்று எஞ்சின் பொருத்தப்பட்ட பிறகு ரயில் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தாலும், கோடை வெயிலில் நடுவழியில் காத்திருந்த பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.