இன்று மாலை சென்னையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் - நாளை பட்ஜெட் தாக்கல்!
2026-27-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
2026-27-ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட் நாளை நிதி அமைச்சர் மரிய வில்சன் அவர்களால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மறுநாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் அவர்கள் மாநிலத்தின் தனித்துவமான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, அதன் மீதான விவாதம், அமைச்சர்களின் பதிலுரை மற்றும் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் என இக்கூட்டத்தொடர் சுமார் ஒன்றரை மாதங்கள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இடம்பெறும் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஏற்கனவே 200 யூனிட் இலவச மின்சாரம், ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி, மற்றும் செப்டம்பர் 15 முதல் தொடங்கப்படவுள்ள குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் திட்டம் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கான நிதியுதவி உள்ளிட்ட எஞ்சிய வாக்குறுதிகளை நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்துவது குறித்து இன்றைய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
