"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்... பாடப்புத்தகங்களில் மாற்றம்" - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் புத்தகப் பை சுமையைக் கணிசமாகக் குறைக்கும் வகையில், பாடப்புத்தகங்கள் அனைத்தும் வண்ணப் படப் புத்தகங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
"இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வி முறை மாறுகிறது" என்று குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்களின் கற்றல் முறையை இனிமையான அனுபவமாக மாற்றுவதே அரசின் முதன்மை நோக்கம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, ஆர்வத்துடன் கற்பதற்கான பல புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த விவரங்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார்:

கடினமாக உணரப்படும் கணிதப் பாடத்தைக் கதைகள் மற்றும் எளிமையான செயல்பாடுகள் வழியே கற்றுத்தரும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றம் பெறவுள்ளன.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட 'STEAM' (Science, Technology, Engineering, Arts, Mathematics) கற்பித்தல் முறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

"நிலாவிற்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் கூடக் குறைவான எடையைத்தான் எடுத்துச் சென்றிருப்பார்; ஆனால் நமது பள்ளி மாணவர்கள் அவரை விட அதிக எடையைச் சுமக்கிறார்கள். புத்தகப் பையின் எடை எந்த அளவுக்குக் குறைகிறதோ, அந்த அளவுக்கு மாணவர்களின் மனச்சுமையும் குறையும்" என அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளுக்கான கற்றலை எளிமையாக்கி, உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
