சிறுவர்கள் ஓட்டிச் சென்ற கார்... டிவைடரில் மோதி கவிழ்ந்து விபத்து - பிளஸ்-2 மாணவர் பலி!

 
கார் விபத்து

சென்னை குன்றத்தூர் அருகே 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புறக் கவிழ்ந்த கோர விபத்தில், பிளஸ்-2 படித்து வந்த மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உரிமம் பெறாத சிறுவர்கள் காரை இயக்கி விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் நரேன் (17), அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நரேன் தனது நண்பர்களான சலைத் ராஜ் (17), அரவிந்த் (17), கேசவ் (17) மற்றும் எபேந்திரன் (17) ஆகியோருடன் சேர்ந்து காரில் தாம்பரம் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு நள்ளிரவில் டீ குடித்துவிட்டு, மீண்டும் வீட்டிற்குத் திரும்புவதற்காக தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். காரைச் சிறுவன் சலைத் ராஜ் இயக்கியதாகக் கூறப்படுகிறது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

கார் குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் பகுதி அருகே வந்தபோது, அதிவேகமாகச் சென்றதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்தது. கட்டுப்பாடற்ற கார் சாலையின் மையத் தடுப்புச்சுவர் மீது ஏறி, அதன் நடுவில் இருந்த மரத்தின் மீது பலமாக மோதி எதிர்ப்புறச் சாலையில் தலைகுப்புறக் கவிழ்ந்து நொறுங்கியது.

இந்த விபத்தைக் கண்ட சக வாகன ஓட்டிகள் உடனடியாக ஓடிவந்து காரில் சிக்கிய சிறுவர்களை மீட்டுப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், பலத்த காயமடைந்த 4 சிறுவர்களை மீட்டுச் சிகிச்சைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து

அதேவேளையில், காரில் பயணித்த பிளஸ்-2 மாணவர் நரேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் உரிமம் பெறாத 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியது குறித்துக் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.