அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிரான வழக்கு... மனுவைத் திரும்பப் பெற்றார் ஐசரி கணேஷ்!

 
 ஐசரி கணேஷ்

மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்குத் தடையின்மைச் சான்றிதழ் பெற, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிராகக் கல்வியாளர் ஐசரி கணேஷ் தாக்கல் செய்திருந்த மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அனுமதியைப் பெறுவதற்காக, அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்குப் பெரும் தொகை லஞ்சமாகக் கைமாறியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, கடந்த 2024-ஆம் ஆண்டு மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஐசரி கணேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கை விசாரிக்கத் தொடங்கியது.

மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை இந்த விவகாரத்தைத் தனி வழக்காகப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையையும், அவர்கள் அனுப்பிய விசாரணைக்கான நோட்டீஸையும் எதிர்த்து ஐசரி கணேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார் முனைவர் ஐசரி கணேஷ்

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 2024-ஆம் ஆண்டு மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த மூல வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் தான் உள்ளது. எனவே, அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் எவ்வித சட்ட விதிமீறலும் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அமலாக்கத்துறையின் இந்த வாதத்தைத் தொடர்ந்து, தான் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஐசரி கணேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக ஐசரி கணேஷ் தொடர்ந்த மனுவைத் திரும்பப் பெற அனுமதி அளித்து உத்தரவிட்டது.

மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இந்த லஞ்ச விவகாரத்தில் ஐசரி கணேஷிடம் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.