கள் விற்பனைக்கு அனுமதி குறித்த வழக்கு... 6 வருடங்களாக இழுத்தடிக்கும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை.. ஏப்.27க்குள் சொல்லலைன்னா அபராதம்!

 
கள் கள்

தமிழகத்தில் 1937ம் ஆண்டு மதுவிலக்குச் சட்டத்தின்படி கள் இறக்கவும், விற்கவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆர்.ஆறுமுகம் என்பவர் 2020-ல் கள் இறக்கவும், விற்கவும் அனுமதி அளிக்க கோரி நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தார். "கள் என்பது போதைப்பொருள் அல்ல, அது இயற்கையானது மற்றும் உடலுக்கு நல்லது. வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்கவே கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பனை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது" என மனுவில் குறிப்பிட்டிருந்தார். கள்ளில் போதைக்காக வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் அது உடல்நலத்திற்குத் தீங்கானது என அரசுத் தரப்பில் முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 டாஸ்மாக்

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 2020ம் ஆண்டு இந்த மனு விசாரணைக்கு வந்தபோதே உள்துறைச் செயலர் மற்றும் மதுவிலக்குத் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை (2026 வரை) அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. அரசுத் தரப்பில் மீண்டும் கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

டாஸ்மாக்

தமிழக அரசு வரும் ஏப்ரல் 27ம் தேதிக்குள் கண்டிப்பாகப் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில், அடுத்த விசாரணையின் போது அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.