தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கு.. மேலும் 2 பேர் கைது; ரூ. 56 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்காகப் பல கோடி ரூபாய் குதிரை பேரம் நடத்திய வழக்கில், நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் உள்பட மேலும் இரண்டு பேரைச் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம், சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி பேரம் பேசப்பட்ட புகாரில் போலீசார் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ராஜசேகர் மற்றும் அவரது கூட்டாளியான சேதுராஜன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் ராஜசேகர் மற்றும் சேதுராஜன் தங்கியிருந்த இடங்களில் இருந்து, பேரம் பேசுவதற்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்த ரூ. 56 லட்சம் ரொக்கப் பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணத்தின் பின்னணி மற்றும் இதன் உறைவிடம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தவெக எம்.எல்.ஏ-விடம் அரசியல் ரீதியாகப் பேரம் பேச முயன்ற இந்த மிகப்பெரிய சதித் திட்டம் தொடர்பான வழக்கில், ஏற்கனவே யூடியூபர் திருநாவுக்கரசு உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். நாமக்கல்லில் பிடிபட்டுள்ள இந்த இருவரையும் சேர்த்து, இவ்வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இதே வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி, தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ள நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் ராஜசேகர் மற்றும் சேதுராஜன் ஆகிய இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்கப் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகம் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையப் பகுதிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் நேராமல் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் போலீசார் தகுந்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
