வருமானத்தை மறைத்த வழக்கு... கே.என். நேருவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாகவும், கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்தும் விளக்கம் அளிக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு கே.என். நேருவின் சகோதரர் கே.என். மணிவண்ணன் மேலாண்மை இயக்குநராக உள்ள நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திப் பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, 2013-14 முதல் 2015-16 வரையிலான நிதியாண்டுகளில் கே.என். நேரு தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது, அவர் ரூ.17 கோடி கணக்கில் வராத வருமானம் ஈட்டியதாகவும், ரூ.11.98 கோடி வரை முறையான கணக்கு காண்பிக்கப்படாத முதலீடுகளைச் செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை கண்டறிந்தது.

இக்கட்டமைப்புகளின் சேர்க்கையை ரத்து செய்து வருமான வரித் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு, முதற்கட்ட வாதங்களைக் கேட்டறிந்த பிறகு, வருமான வரித்துறை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் போதிய முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்து, இதுகுறித்து 4 வாரங்களில் பதிலளிக்குமாறு கே.என். நேருவுக்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது.
