சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கியது பரிதாபங்கள் சேனல் - வெளியிட்ட விளக்கம்!
யூடியூப் தளத்தில் பிரபலமான 'பரிதாபங்கள்' (Parithabangal) சேனல் சமீபத்தில் வெளியிட்ட "ஆடி மாச பாவங்கள்" என்ற வீடியோவில் இடம்பெற்ற குறிப்பிட்ட காட்சிக்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்த சர்ச்சைக்குரிய காட்சியைத் தங்களது வீடியோவிலிருந்து நீக்கியுள்ளனர்.
'பரிதாபங்கள்' யூடியூப் சேனலில் வெளியாகும் நகைச்சுவை வீடியோக்களுக்குக் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் சமீபத்தில் வெளியான "ஆடி மாச பாவங்கள்" வீடியோவில் இடம்பெற்ற ஒரு சில காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி, பலரின் கண்டனத்திற்கும் எதிர்ப்புக்கும் உள்ளானது. இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் செயல்பட்ட பரிதாபங்கள் குழுவினர், சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை வீடியோவிலிருந்து முழுமையாக நீக்கியுள்ளனர்.

இது தொடர்பாகப் பரிதாபங்கள் குழுவினர் வெளியிட்டுள்ள விளக்கப் பதிவில், "நாங்கள் வெளியிட்ட அந்த குறிப்பிட்ட காட்சி யாரையும் தனிப்பட்ட முறையிலோ அல்லது குறிப்பிட்ட அமைப்பையோ தாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது அல்ல. இருப்பினும், அந்த காட்சி சமூக வலைதளங்களில் சிலரின் மனதைப் புண்படுத்தியதாகச் செய்திகள் வந்தன. மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அந்த சர்ச்சைக்குரிய பகுதியை வீடியோவில் இருந்து நீக்கியுள்ளோம்."
மேலும், தங்களின் நகைச்சுவை வீடியோக்கள் எப்போதுமே மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல்கள் ஏற்படாதவாறு கவனமாகச் செயல்படுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
