தஞ்சையில் தேரோட்டம் தொடங்கியது. இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு!

 
தஞ்சாவூர் தஞ்சாவூர்

இன்று ஏப்.27 திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் 6.30  மணிக்குள்ளாக தஞ்சை  பெரிய கோயில் தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டிருந்து நமச்சிவாய, தியாகராயா கோஷம் எழுப்பி, உற்சாகமாக வடம் பிடித்து பக்தி பரவசத்தில் திளைத்தனர்.

இந்நிலையில் இந்த தேரோட்டத் திருவிழாவில் உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று ஏப்.27ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற்று வருகிறது. 

தஞ்சை

இந்த விடுமுறை தினத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காது. இருப்பினும், அவசரத் தேவைகளுக்காக மாவட்டக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் செயல்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் முக்கியத் தேர்தல் பணிகளில் (மே 4 வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள்) ஈடுபடும் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரானது தஞ்சையின் நான்கு ராஜவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் மே மாதம் ஒரு சனிக்கிழமை வேலைநாளாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், தஞ்சை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தேரோட்டத்தைக் காணத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தஞ்சையில் குவிய திட்டமிடத் தொடங்கியுள்ளனர்.