பிரவலிகாவின் தாயாருக்கு இலவச வீடு, ரூ.10 லட்சம் உதவித்தொகை, அரசு வேலை அறிவித்தார் முதல்வர் - ரூ.90க்காக பஸ்ஸில் இருந்து தள்ளிவிடப்பட்டு பலியான துயரம்!
தெலுங்கானா மாநிலத்தில் சில்லறைத் தொகை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பெண் பயணி ஒருவரால் ஓடும் அரசுப் பேருந்திலிருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட இளம் பெண் நடத்துநர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, மவுனிகா என்ற பெண் பயணி தனது மகனுடன் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். ரூ.10 மதிப்புள்ள பயணச்சீட்டுக்காக அவர் ரூ.100 நோட்டைக் கொடுத்துள்ளார். நடத்துநராகப் பணியாற்றிய 24 வயதான பிரவலிகா என்பவரிடம் அப்போது மீதி ரூ.90 கொடுப்பதற்குப் போதிய சில்லறை இல்லை. இதனால், பயணச்சீட்டின் பின்புறம் மீதித் தொகையைக் குறித்துக் கொடுத்து, இறங்கும் போது பெற்றுக் கொள்ளுமாறு பிரவலிகா அறிவுறுத்தியுள்ளார்.

பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, மீதிச் சில்லறையைக் கேட்பதில் பயணி மவுனிகாவிற்கும் நடத்துநர் பிரவலிகாவிற்கும் இடையே திடீரெனக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மவுனிகா, பேருந்தின் படிக்கட்டு அருகே நின்றுகொண்டிருந்த நடத்துநர் பிரவலிகாவை ஓடும் பேருந்திலிருந்து திடீரென வெளியே தள்ளிவிட்டார்.
இதில் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்த பிரவலிகா உடனடியாக மீட்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் பயணி மவுனிகாவைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உயிரிழந்த நடத்துநர் பிரவலிகாவின் குடும்பத்திற்குத் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிரவலிகாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி, அவரது தாயாருக்கு அரசு வேலை மற்றும் இலவச வீடு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பயணிகளுக்காக சேவையாற்றும் அரசுப் பெண் ஊழியருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் தெலுங்கானா முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
