“டெல்லி செல்லும் முதல்வர்... சோனியா, ராகுலிடம் இதைச் சொல்ல வேண்டும்” - இபிஎஸ் அறிக்கை!

 
எடப்பாடி

நாளை டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய், மேகதாது அணை விவகாரம் மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் கருத்துகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் எடுத்துக்கூறி உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்துப் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.

மேகதாது

"மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை, அது கர்நாடகாவின் உரிமை" எனக் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அரசு நிகழ்ச்சிகளிலும் பொதுவெளியிலும் தொடர்ந்து பேசி வருவது இரு மாநில மக்களிடையே வேற்றுமையை உருவாக்கும் செயல் என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பன்மாநில நதிகள் தேசிய சொத்து என்றும், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி மேல்படுகை மாநிலங்கள் எவ்விதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கர்நாடக அரசு மாதந்தோறும் தமிழகத்திற்கு உரிய பங்கு நீரைத் திறந்துவிடுவதில்லை என்றும், கர்நாடக அணைகள் நிரம்பிய பின் வெளியேறும் உபரிநீரும், எல்லைப் பகுதிகளில் பெய்யும் மழைநீருமே தற்போது மேட்டூர் அணைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த உபரிநீரையும் தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி மேகதாது

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு காவிரியில் உரிய பங்கு நீரைப் பெறாததால் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாவதுடன் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகும் என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

தவெக - காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக உள்ள விஜய், தனது டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் மேலிடத் தலைவர்களைச் சந்தித்து, கர்நாடக முதலமைச்சரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைக் கர்நாடக அரசு முறையாக நடைமுறைப்படுத்தவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.