“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வரின் அமைதி ஆபத்தானது”... வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழிசை வலியுறுத்தல்!

 
தமிழிசை லண்டன்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழகக் காவல்துறையின் விசாரணை நேர்மையாக இல்லை என்பதால், இவ்வழக்கை மத்தியப் புலனாய்வுப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரின் அமைதி ஆபத்தானது எனவும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழகக் காவல்துறை விசாரணை நேர்மையாகத் தெரியவில்லை என்பதால், இவ்வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும். பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கே இந்நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாகும்? சம்பவமே நடக்கவில்லை என்ற அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல்குமார் எங்கே? முதல்வரின் அமைதி ஆபத்தானது” எனக் குற்றம் சாட்டினார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வேண்டும் எனத் தெரிவித்த அவர், “அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வதற்கு எந்தத் தார்மிக உரிமையும் இல்லை. பெண்களுக்கு எதிராக யார் பாலியல் குற்றங்கள் செய்கிறார்களோ, அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று காட்டமாகக் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநரிடம் மனு அளிக்கச் செல்வது குறித்துப் பேசிய தமிழிசை, “இன்று கவர்னரிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை மனு கொடுக்கிறார். இது தான் கர்மா. கவர்னர் அழைக்கும் போதெல்லாம் நீங்கள் போகவில்லை; கவர்னர் மாளிகையை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்தினீர்கள். இன்று நீங்களே ஆளுநர் மாளிகையை நாடி சென்றுள்ளீர்கள்” என விமர்சித்தார்.

பத்மஜா கள்ளக்குறிச்சி

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசிய அவர், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறுவது அரசியலமைப்பில் மிகப்பெரிய தவறு; மன்னிக்க முடியாத தவறு. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் எல்லாரும் தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் சாதித்துவிட்டார்கள் என்று த.வெ.க. ஆட்சியைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் மேகதாது, காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், விசிக தமிழக அரசுக்கு ஒரு அழுத்தமும் கொடுக்க மாட்டார்கள். அனைவரின் ஒற்றை நோக்கமும் தீபம் ஏற்றக்கூடாது என்பது மட்டும்தான். இங்கு ஆட்சி நடக்கவில்லை; கூட்டணி ஆட்சியின் குழப்பம்தான் நடந்துகொண்டிருக்கிறது” என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.