உஷார்... காலாவதியான சாக்லேட் சாப்பிட்டு ரத்த வாந்தி எடுத்த குழந்தை கவலைக்கிடம்!

 
சாக்லேட்

 காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட குழந்தையின் உடல்நிலை, மோசமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .லூதியானாவை சேர்ந்த ஒன்றரை வயது சிறுமி  காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட நிலையில், ரத்த வாந்தி எடுத்ததால் பதறியடித்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் பாட்டியாலாவிற்கு தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது உறவினர் ஒருவர், வீட்டின் அருகே இருந்த  மளிகைக் கடையில் இருந்து சாக்லேட் பாக்கெட் ஒன்றை வாங்கி சிறுமிக்கு சாப்பிட கொடுத்துள்ளார். 


அந்த சாக்லேட்டை சாப்பிட்ட சிறுமியின் வாயில் இருந்து சிறிது நேரத்திலேயே ரத்தம் கொட்டியது. ஆபத்தான நிலையில் உடனடியாக சிறுமியை கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்களின் முதற்கட்ட  பரிசோதனையில், விஷப் பொருளை உட்கொண்டதால் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது தெரியவந்தது.இதையடுத்து, குடும்பத்தினர் மாநில சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

சாக்லேட்

இதற்கிடையில், மாநில சுகாதாரத் துறை குழுவினர் மாதிரிகளை சேகரிக்க மளிகைக் கடைக்குச் சென்றனர். கடையில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்கப்பட்டதை பின்னர் துறை உறுதிப்படுத்தியது. கடையில் இருந்து காலாவதியான மற்ற தின்பண்டங்களும் கைப்பற்றப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். 
கடந்த மாதம் பாட்டியாலாவில் இதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது. 10 வயது சிறுமி தனது பிறந்தநாளில் விஷ கேக்கை சாப்பிட்டு இறந்தார். அதே கேக்கை சாப்பிட்ட அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் நோய்வாய்ப்பட்டு, மருத்த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கேக் ஆர்டர் செய்யப்பட்ட பேக்கரி, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பதிவு செய்யப்படாததும், போலி பெயரில் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

From around the web