மண்ணாய் மாறிய மாநகரம்... வானுயர எழுந்த புழுதிப் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

 
புழுதி புழுதி

ராஜஸ்தான் மாநிலம் ஷரு நகரில் ஒட்டுமொத்த மனிதர்களையும் நிலைகுலைய வைக்கும் வகையிலான ஒரு பயங்கரமான இயற்கை சீற்றம்   அரங்கேறியுள்ளது. அங்குள்ள அனைத்துப் பகுதிகளிலும்   கோடைக்காலம் முடிந்து காற்று பலமாக வீசி வரும் நிலையில் திடீரென வானுயர அளவுக்கு மிக பிரம்மாண்டமான புழுதிப் புயல் வீசத் தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நகரின் நாலாபுறமும்  பரவிய இந்த புழுதிப் புயலால் அந்தப் பகுதியே  பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

இந்த திடீர் இயற்கை சீற்றத்தின் காரணமாக ஒட்டுமொத்த ஷரு நகரமே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு முழுமையாகப் புழுதிப் படலத்தால் மூடப்பட்டு உருக்குலைந்து போனது. பகல் நேரத்திலேயே கருகிருட்டு நிலவியது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டதால் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் அனைவரும் தங்களின் வாழ்விடங்களிலேயே முடங்கி கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் சாலைகளில் சென்ற வாகனங்கள் அனைத்தும் தங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் மெதுவாகச் சென்றதால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

மிகவும் கொடூரமாக வீசிய இந்த  புழுதிப் புயலால் நகரின் பல இடங்களில் மரங்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் சரிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. புழுதிப் புயலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில்  குளிர்ந்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் வெப்பம் தணிந்து ஓரளவு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த விசித்திரமான இயற்கை மாற்றம் குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்   தீவிரமாகக் கண்காணித்து மக்களுக்குத் தகுந்த எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.