போரின் உச்சகட்டம்.. பஹ்ரைனில் அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தளம் மீது ஈரான் வான்வழித் தாக்குதல்!

 
ஈரான் பஹ்ரைன்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வளைகுடாப் பகுதியில் போர் தீவிரமடைந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் விதமாக, பஹ்ரைன் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கிய இராணுவப் பிரிவான 5-வது கடற்படைத் தளத்தின் மீது ஈரான் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படைஇந்தத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் நடத்திய தாக்குதலில், கடற்படைத் தளத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் அத்தியாவசிய எரிபொருள் கிடங்குகள் மற்றும் ஆயுத ஆதரவுக் கிடங்குகள் தீப்பற்றிப் பெரும் புகையுடன் எரிந்து வருகின்றன.

ஈரான் பஹ்ரைன்

கடற்படைத் தளத்தின் வான் பாதுகாப்புப் பணியில் இருந்த புகழ்பெற்ற 'பேட்ரியாட் ரேடார்', விமானக் கட்டுப்பாட்டு ரேடார் மற்றும் வான்வழித் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும் 'சி-ரேம்' ரேடார் கட்டமைப்பு ஆகியவற்றைத் தங்களது ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாக ஈரான் இராணுவம் உரிமை கோரியுள்ளது. இதனுடன், தரைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையமும் இத்தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே பஹ்ரைன் தலைநகர் மற்றும் கடற்படைத் தளம் அமைந்துள்ள 'ஜுபைர்' பகுதிகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் தொடர்ச்சியாக ஒலித்தன. பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ஈரான் பஹ்ரைன்

அமெரிக்க மத்தியக் கட்டளையகம் ஈரானில் உள்ள கடலோரப் பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் தளங்களை இலக்காகக் கொண்டு தொடர் வான்வழித் தாக்குதலை நடத்திய சில மணி நேரங்களிலேயே, அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக ஈரான் இந்தத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. இதனால் மத்தியக் கிழக்கு நாடுகளின் எல்லைகளில் மீண்டும் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.